புங்குடுதீவுக்கிராமம் - கள்ளியாற்றுத் திட்டம்
யாழ்ப்பாணக்குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம்
11.2 சதுரமைல் பரப்பளவினைக் கொண்டுள்ளது. இத்தீவு பாய்க்கப்பல் உருவத்தினைப் போன்ற
நிலத்தோற்றத்தைக் கொண்டதுடன் தீவின் தென்பகுதி சார்பு ரீதியாக உயர்வாகவும், வடக்கு, வடமேற்குப் பிரதேசம்
உயரம் சிறிது குறைவான தோற்றத்தைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இத்தீவின் பிரதான
நிலப்பரப்புத்தவிர்ந்த ஊரதீவு, கேரதீவு, பல்லதீவு போன்ற சிறிய தீவுகள் மழைக்காலங்களில் நீரினால்
பிரிக்கப்பட்டும் கோடைகாலங்களில் இணைந்தும் காணப்படுகின்றன. இத்தீவு சராசரி கடல் மட்டத்திலிருந்து 4 - 6
அடி உயரம் கொண்ட தரைத்தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன் தரைமேலுயர்த்துகையினால் உருவான தீவாகக்
காணப்படுகின்றது. அத்துடன் இத்தீவு அதிவரன் வலயத்தில் அமைந்துள்ளதனால் வருடத்தில் சராசரி 50 அங்குல
மழைவீழ்ச்சியே கிடைக்கப்பெறுவதுடன் இதில் 90.0 சதவீதமான மழைவீழ்ச்சி ஐப்பசி, கார்த்திகை, மார்கழி
மாதங்களிலேயே கிடைக்கப்பெறுகின்றது. புவிவெளியுருவப் பண்புகளை கருத்திற் கொள்ளின் ஏறத்தாழ
சமதரையான நிலப்பரப்பாகவுள்ளதுடன் தரைக்கு கீழே முருகைக்கற்பாறைகளைக் கொண்டிருப்பதுடன், உவர் நீர்
முருகைக்கற்பார் துவாரங்களுடாக நிலப்பகுதி சார்ந்து நகர்த்தும் நிலையையும் காணமுடிகின்றது. இதனால்
இத்தீவின் பெரும்பாலான பகுதிகள் உவர்த்தன்மை கொண்ட, உப்புத்தன்மை கொண்ட நீர்வளத்தினையே
கொண்டிருக்கின்றது. இருந்த போதிலும் மாரி காலத்தில் கிடைக்கப்பெறும் மழை நீர் குளங்கள் கிணறுகளில்
தேங்கும் போது ஏப்ரில், மே மாதம் வரை இருவாட்டித்தண்ணீராக விருப்பதால் மக்கள் தமது அன்றாட
தேவைகளுக்குப்பயன்படுத்தி வருகின்றனர். குடிநீரைப் பொறுத்தளவில் தீவின் சிற்சில இடங்களில் (1௦௦1௦8)
கிடைக்கப்பெறும் நிலையிலும், அரசாங்கத்தினாலும் தனியாரினாலும் வேலணை சாட்டிப்பிரதேசத்திலிருந்து
எடுத்து வரப்படும் நன்னீர் வளத்தை பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
கிராமத்தில் மக்கள் வாழ்வு
1991ம் ஆண்டுக்குடித்தொகை மதிப்பீட்டின் பிரகாரம் ஏறத்தாழ 18000 பேர் புங்குடுதீவுக்கிராமத்தில்
வாழ்ந்து வந்துள்ளனர். 1991ம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வின் காரணமாக 1996ல் இத்தீவில் 851
மக்களே வாழ்ந்திருந்ததாக பிரதேசசெயலக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. தற்காலிகமாக இடம்பெயர்ந்த மக்கள்
உள்நாட்டிலும் சர்வதேசங்களிலும் வாழத்தலைப்பட்டதுடன் காலப்போக்கில் நிரந்தர இடப்பெயர்வாளர்களாகி
விட்டனர். 2022ம் ஆண்டு இத்தீவில் 3800 மக்களே வாழ்கின்றனர். இத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளவும்
குடியேறாமைக்கு பல்வகைப்பட்ட பெளதிக, பண்பாட்டுக்காரணிகள் இருந்தபோதிலும் யுத்த காலத்திலிருந்து
காணப்பட்டிருந்த உட்கட்டுமான வசதிக்குறைவும், பாதுகாப்பற்றநிலை போன்றவற்றுடன் நன்னீர் வளப்பற்றாக்
குறையும் பிரதான காரணியாக இருந்துள்ளது. கட்டுரை ஆசிரியர் 1978ம் ஆண்டு புங்குடுதீவுக்கிராமமக்களின்
யாழ்ப்பாண நகரத்து குடியிருப்பாளரிடம் மேற்கொண்ட ஆய்வில் பிள்ளைகளின் கல்வி (36%) நன்னீர் பற்றாக்குறை
(31.0%) ஆகிய இரு காரணிகளாலேயே நகரக்குடியிருப்பை விரும்ப வேண்டி ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே நன் நீர் பற்றாக்குறையை நீண்டகாலமாக இக்கிராம மக்கள் எதிர்கொண்டிருந்தனர் என்பது தெளிவு,
இருப்பினும் 1980களுக்கு முன்னர் இப் பற்றாக்குறையை சவாலாக ஏற்று தமது கிராமத்தில் மக்கள் வாழ்ந்து
வந்துள்ளனர். இருந்த போதிலும் 1991ம் ஆண்டு இடம் பெயர்ந்து குடாநாட்டிலும் வன்னிப் பிராந்தியத்திலும் நன்னீர்
வளத்தோடு ஏறத்தாழ நான்காண்டுகள் வாழ்ந்திருந்த நிலையில் அவர்களின் மீள்வரவினால் நன்னீர்
வளப்பற்றாக்குறையை எதிர்கொள்வதில் கஷ்டப்படுவதை அவதானிக்கமுடிகின்றது. அதே நேரம் இக்கிராமத்து
நீர்நிகைள் குறிப்பாக கிணறுகளில் பெரும்பாலானவை பராமரிப்பின்றி தூர்ந்த நிலையிலும் காணப்படுகின்றது.
நன்னீரின் தேவையை மட்டுப்படுத்தப்பட்டளவில் அரசினாலும் தனியாராலும் வழங்கிவருவதால் குடிநீர்ப்
பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்கக் கூடியதாகவுள்ளது.
நுர்வளம் தொடர்பான ஆய்வுகள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்வளம் தொடர்பான ஆய்வுகள் காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது. எனினும் புங்குடுதீவுக் கிராமத்தின் நன்னீர் நீர்வளம் தொடர்பாக சமூக பற்றாளர் அமரர் தொண்டர்
திருநாவுக்கரசு அவர்களால் குறிப்பாக கள்ளியாற்றினை நன்னீர் பிரதேசமாக மாற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட
அரச, அரச சார்பற்ற நிறுவனங்களோடு கலந்துரையாடி கள்ளியாற்று நீர் கடலில் கலக்காமல் அணைகட்டப்பட்டது.
இருப்பினும் அடைமழைகாரணமாக மழைநீர் கிராமத்துள் பல்வேறு அசெளகரியங்களை ஏற்படுத்திய நிலையில்
கிராமமக்கள் அணையை வெட்டி நீரை வெளியேற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் அவரது
சிந்தனையில் கள்ளியாறு, சோழனோடை பகுதியில் நீரைத் தேக்குவதன் மூலம் கிராமமக்கள் நன்மை பெற
வாய்ப்புண்டு என செயற்பட்டவர். இதனையடுத்து சமூக சேவகர் அமரர் சுயோ.பூராசா அவர்கள் நன்னீர் வளம்
தொடர்பாக அரசு மட்டத்திலும் அரச நிர்வாக மட்டத்திலும் பல அமுத்தங்களைக் கொடுத்து வந்தவர். அவர் யாழ்
பல்கலைக்கழக புவியியற்றுறையினருடன் குறிப்பாக பேராசிரியர் கா.குகபாலன் அவர்களுடன் தொடர்பினை
ஏற்படுத்தி புங்குடுதீவுக்கிராமத்தின் நன்னீர் வளம் தொடர்பாக விஞ்ஞான பூர்வமான ஆய்வொன்றுக்கு
அத்திவாரமிட்டவர். அதன் பயனாக பேராசிரியர் கா.குகபாலன் தலைமையில் புவியியற்றுறை சிரேஷ்ட
விரிவுரையாளர் கலாநிதி துஸ்யந்தி இராஐசூரியர், இரசாயனவியல் பேராசிரியர் மீனா செந்தில்நந்தனன்,
விவசாயபீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் துஷ்யந்தி மிகுந்தன் ஆகியோர் புங்குடுதீவுக் கிராமத்தில் 40 கிணறுகளை
அடையாளம் கண்டு ஏறத்தாழ இரண்டு வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களது ஆய்வின் பேறாக
இக்கிராமத்தில் தரை கீழ் நன்னீர் படுக்கைகளை அவதானிக்க முடியவில்லை எனவும் ஆங்காங்கே ஒரு சில
இடங்களில் தரைகீழ் நன்னீர் படுக்கைகளையே அவதானிக்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளனர். அவர்களால்
முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளாக இத்தீவில் நன்னீர் வளத்தை மேம்படுத்த வேண்டுமாயின் குறிப்பிட்ட காலத்தில்
பெறப்படும் மழைவீழ்ச்சியை கடலுடன் கலந்து விடாமல் கிணறுகள், குளங்களில் தேக்குவதன் மூலம் உவர்தன்மை
குறைந்த நீரினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நீர் வழிந்து கடலுடன் கலக்குமிடங்களில் அணைகளை
கட்டுவது சிறப்பானது என்பதையும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் புங்குடுதீவுக்கிராமத்திற்கு காலத்துக்குகாலம் கிடைக்கப்பெறும் நிதி
ஆதாரத்தைக் கொண்டு பல இடங்களில் மழைநீர் கடலுடன் கலக்காதிருக்க தடுப்பணைகளை ஏற்படுத்தி நன்னீர்
வளத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக குளங்களை அகலப்படுத்தியும்
நன்னீர் வளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பாதக மேற்படாத வகையில் ஆளப்படுத்தியும் மழை நீரை சேமிக்கும்
திட்டத்தை கமத்தொழில் திணைக்களமும் நீர்பாசத்திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றது. உதாரணமாக
ஒலி கண்ட குளத்தைக் குறிப்பிடலாம். இந்நிலையில் நீர்ப்பாசனத்திணைக்களம் நன்னீர் வள மேம்பாடு கருதி
கிழக்கே மடத்து வெளி, வரதீவு, தெற்கே பிரதான வீதி, மேற்கேரைதீவு வடக்கே சோழகனோடையிலிருந்து சற்று
தெற்கு ஆகிய எல்லைகளுக்குட்பட்ட 131 ஏக்கர் பரப்பளவுள்ள நீரேந்து பிரதேசத்தில் தடுப்பணைகளை ஏற்படுத்தி
நீரினைச் சேமித்தல், மற்றும் களதீவுக்கு மேற்கே 52 ஏக்கர் பரப்பளவுள்ள நீரேந்து பிரதேசத்தில் தடும் பணைகள்
மூலம் நீரைச்சேமித்தல் என்ற நிலையில் திட்ட முன்மொழிவினை தயாரித்து பிரதேச செயலகத்திற்கு
சமர்ப்பித்துள்ளனர். இத்திட்டம் தொடர்பாக புங்குடுதீவு வடகிழக்குப்பிரதேச அபிவிருத்தியில் ஆர்வம்
கொண்டுழைத்துவரும் சமூக ஆர்வலர் அ.சண்முகநாதன் அவர்களின் பார்வைக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தை வரவேற்ற அவர் பெருந்தொகை நிதி இதற்குத் தேவைப்படும் எனவும் தெரிவித்தார். அதே போல
பிரதேச செயலகத்தினர் இதற்கான நிதியினைப் பெற்றுக் கொள்வது சிரமம் எனக் கூறி காலப்போக்கில்
பரிசீலிப்போம் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கிராமத்தின் புலம்பெயர் உறவுகள் குறிப்பாக கனடா புங்குடுதீவு பழைய மாணவர்
சங்கத்தினர் மேற்குறித்த திட்டத்தை செயற்படுத்த முன்வந்துள்ளனர். அவர்களது முயற்சி வெற்றியளிக்கும்
பட்சத்தில் கள்ளியாறு, சோழகன் ஓடையின் ஏனைய பிரதேச நன்னீர் தடுப்பணைகள் பற்றி சிந்திக்க முடியும்.
வடகீழ் பருவப்வயயர்ச்சிக்காலத்தில் கிடைக்கப்வறும் மழைவீழ்ச்சியும் வழிந்தோடு நிலையும்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வழுக்கையாறு போல புங்குடுதீவுக் கிராமத்தில் கள்ளியாறு என்ற பருவகால
ஆறு உண்டு. மழைப்பருவத்தில் வழுக்கையாற்று நீரானது உயரம் கூடிய வலிவடக்குப் பிரதேசத்திலிருந்து
படிப்படியாக தெற்கு நோக்கி நகர்ந்து இறுதியாக அராலியை அணுமித்த கல்லுண்டாய் வெளியில் கடலுடன்
கலக்கின்றது. இருந்த போதிலும் நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத்திணைக்களம் போன்றன இடத்திற்கிடம்
தடுப்பணைகளை ஏற்படுத்தி நீரினை விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். உபரிநீர்
கடலுடன் கலக்கின்றது. அதேபோல புங்குடுதீவுக் கிராமத்தில் தென்கிழக்கே உயரமான நிலப்பகுதியான
வீராமலை, வல்லன் போன்ற இடங்களில் கிடைக்கப்பெறுகின்ற மழைநீரானது பெரியதிராய், சின்னக்கிராய் ஊடாக
சென்று குறிச்சிக்காட்டுக்கும். கண்ணகிபுரம் வளைவுக்கும் மிடையிலுள்ள மதகு வழியாக சென்று குறுக்கு வீதியில்
உள்ள மதகினூடாக கள்ளியாற்றை அடைகின்றது. என்னுமொரு நீர்த் தொகுதியானது நாகதம்பிரான் கோவில்
மடத்து வெளி சார்ந்து கிடைக்கப்பெறும் உபரி நீரானது பிரதான வீதியில் கண்ணகி புரம் வளைவுக்கு சற்று
முன்னுள்ள மதகினூடாக களதீவின் கிழக்குப்புறம் சார்ந்து சோழகனோடையூடாக கடலுடன் செல்லும் நிலை
காணப்படுகின்றது.
மூன்றாவதாக கிளக்கூர் சந்தியை ஒட்டிய பிரதேசத்திற்கும் ஆஸ்பத்திரிச் சந்தியை ஒட்டிய
பிரதேசத்திற்குமிடையில் பிரதானவீதிக்கு தென்புறத்தில் கிடைக்கப்பெறும் நீரானது வழிந்தோடி
மகாவித்தியாலயத்திற்கு பின்புறமாக முற்றவெளியூடாக பழைய குடியேற்றத்திட்டம், புதிய குடியேற்றத்திட்டம்
சார்ந்து சென்று தேவாலயத்தின் முன் சிறிய மதகின் வழியாக கள்ளியாற்றில் கலக்கும் நிலையும் உண்டு.
இறுப்பிட்டி - பெருங்காடு பிரதான வீதிக்கு கிழக்கே பெறப்படும் நீரானது வடிந்து கள்ளியாற்றில் சங்கமாகின்றது.
புங்குடுதீவு இறுப்பிட்டி - பெருங்காடு வீதிக்கு மேற்கே 4,5ம் வட்டாரங்களில் கிடைக்கப்பெறும் பருவகால
மழைவீழ்ச்சியானது அப்பிரதேசங்களில் காணப்படக்கூடிய கிணறுகள், குளங்களின நீர் மட்டத்தை
உயர்த்துவதுடன் உபரி நீர் நுணுக்கல் சார்ந்த உயரம் குறைவான நிலத்தில் வெள்ளத்தை ஏற்படுத்துவதுடன்
கடலில் கலக்கும் நிலையைக் காணமுடிகின்றது.
ஒட்டு மொத்தமாக புங்குடுதீவுக் கிராமத்தில் கிடைக்கப்பெறும், 65 சதவீதத்திற்கு மேற்பட்ட
மழைவீழ்ச்சியால் கிடைக்கப்பெறுகின்ற உபரி நீர் புங்குடுதீவு கிழக்குப் புறம் சார்ந்த சோழகனோடை கள்ளியாறு
பகுதிகளுடாக கடலை சென்றடையும் நிலை இருந்து வந்த போதிலும் தற்போது பகுதியளவு நீர் ஒலி கண்ட குளம்
சார்ந்த பகுதிகளில் தடுப்பணைகள் மூலம் கடலில் கலக்காது ஒரளவிற்கு கட்டுப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுளளது.
கணிசமான நீர் சோழகனோடை கள்ளியாற்று வடி நிலம் சார்ந்து கடலில் கலக்காது தேங்கிக் காணப்படும் நிலை
இருந்தும் மார்ச், ஏப்ரில் மாதத்துடன் நிலத்தடி நீராகவோ அன்றில் ஆவியாக்கச் செயற்பாட்டினாலோ வற்றி விடும்
நிலையையே அவதானிக்க முடிகின்றது.
பருவகால மழைநீரைச் தேக்குவது சாத்தியமா?
புங்குடுதீவு கிராமத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் தடையாகவிருந்து வருவது நன்னீர்
வளப்பற்றாக்குறையேயாகும். இதன் விளைவாகவும் யுத்த சூழ்நிலையினாலும் கடந்த ஆறு தசாப்தகாலமாக
மக்களின் வெளியகல்வு தொடர்ந்த வண்ணமேயுள்ளது. நன்னீர் வளவாய்ப்பிணை மேம்படுத்தும் பட்சத்தில்
தற்போது வாழ்ந்து வரக்கூடிய மக்களையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும். தற்போது மழைகாலம் தவிர்ந்த
வரட்சிப்பருவங்களில் அரசினாலும், தனியாரினாலும் சாட்டியிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டளவில் நன்னீர்
குடிப்பதற்காக வழங்கப்படுகின்றது. தனியாரினால் வழங்கப்படும் நீருக்கு கட்டணம் செலுத்தப்படவேண்டியுள்ளது.
அரசினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நன்னீர் வழங்கும் திட்டத்தின் உட்கட்டுமானப்பணிகள் பெருமளவில்
முடிந்து விட்டது. எனினும் நீராகாரத்தை பெறும் சாத்தியக் கூறுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை.
இந்நிலையில் கடந்த நான்கு தசாப்தகாலமாக கிராமத்தில் கிடைக்கப்பெறும் மழைநீரினை சேமிப்பதன்
மூலம் மழை நீரானது தரைகீழ் நீராக ஊடுருவதன் மூலமும் தரைகீழ் நீரினைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டு
என்ற நோக்கில் அரசினால் வழங்கப்படக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட நிதியினைக் கொண்டு சம்பந்தப்பட்ட
திணைக்களங்கள் மூலம் சிறியளவில் ஆங்காங்கே அதனால் ஏற்பட்ட பலன் பெரிதளவில் இல்லை என்றே கூறலாம்
நீர்த்தடுப்புத் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
களதீவுக்கு மேற்காகவும் கிழக்காகவும் வழிந்தோடி கள்ளியாறு, சோழகனோடை துரிசுகளைக் கடந்து
கடலில் கலக்கும் மழைநீரினைச் இடையிடையே தடுப்பு அணையினை ஏற்படுத்தி நீரினைச் சேமிப்பதன் மூலம்
தரைமேல் நன்னீரையும், தரைகீழ் நன்னீர்னையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கமானது தற்போது
வலுவடைந்து வருகின்றது. இதற்காக அரசும் கடும் சிலமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
புங்குடுதீவைப் பூர்வீகமாகக் கொண்ட ஏறத்தாழ 10000 குடும்பங்கள் மேற்குலக நாடுகளில் வாழ்ந்து
வருகின்றனர். அவர்களில் கணிசமானவர்கள் தங்களது பூர்வீகக்கிராமத்தை மீள் உயர்த்துவதற்கு விரும்பும் நிலை
தற்போது காணப்படுகின்றது. ஆன்மீகம், கல்வி, விளையாட்டுத்துறைகளுக்கு தொடர்ச்சியாக தங்களால் இயன்ற
உதவிகளை கிராமத்துக்கு வழங்கிவருகின்றனர். இருந்த போதிலும் நன்னீர் திட்டத்தைத் தற்போது கையிலெடுத்து
நீர் பிரச்சினையை தீர்க்க கனடாவில் செயற்பட்டு வரும் கனடா பழைய மாணவர் சங்க நிர்வாகிகள்
முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
நன்னீர் சேமிக்கும் தடுப்பணைகளை கள்ளியாற்று வடிநிலத்தில் இரு பிரிவுகளாக செயற்படுத்த முடியும்.
1. பிரதான வீதியிலிருந்து சோழனோடை வரையில் தடுப்பணைகள் அமைத்து நன்னீரைத்
தேக்குவது
11. கள்ளியாறுசார்ந்து தடுப்பணைகளை அமைத்தல்
இத்திட்ட ஒரு பாரிய திட்டமாகும். பல மில்லியன் ரூபா நிதியுடன் தொடர்புபட்டது. தொழில்நுட்பத்துடன்
செயற்படுத்த வேண்டிய திட்டம். தற்போது காணப்படக் கூடிய குடியிருப்பக்களைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்த
வேண்டிய திட்டம். முகாமைத்துவத்தை மேற்கொள்ளக்கூடிய ஆளணிகளை இத்திட்டம் செயற்படுவதற்கு முன்னர்
பெற்றுக் கொள்ப்பட வேண்டிய திட்டம, அரசாங்கத்தினதும் மேற்குறித்ததிட்டச் செயற்பாட்டுடன் கூடிய
நிறுவனங்களது ஒத்துழைப்பும் கண்காணிப்பும் வேண்டிய திட்டம். எனவே இவற்றை எல்லாம் பூர்த்தி செய்து
மேற்கொள்ளப்படும் திட்டம் வெற்றிபெற வாய்ப்புண்டு.
இதில் முதற்கட்டமாக சோழகனோடை நோக்கி நீர் வழிந்தோடக்கூடிய பிரதான வீதியை ஒட்டி களதீவுக்கு
கிழக்குப்புறத்தே நீரினைச் சேமிக்கக் கூடிய வகையில் பரீட்சார்த்தமாக தடுப்பணையினை உருவாக்குவதன் மூலம்
அடுத்த கட்ட நகர்வுக்கு செய்வது சிறப்பானதாகும்.
இத்திட்டம் செயற்படுத்த நீர்பாசனத்திணைக்களம் முழு ஒத்துழைப்பையும் தருவதற்கு முன்வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது கள்ளியாறு சார்ந்து நீரினைச் சேமிப்பது தொடர்பாக மேலதிகமாக ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுதல் அவசியமானது. ஏனெனில் கள்ளியாற்றுப் வடிநிலமானது கடல் மட்டத்திலிருந்து 1.5 - 2.0 அடி
உயரம் கொண்டதாக விருப்பதால் அயல்கிராம மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுதல் அவசியமானது.
பேராசிரியர்.கா.குகபாலன்